HOME

Tuesday, 11 March 2014

திருப்பூரின் கதை!

''வரலாற்றைத் தெரிந்துகொள்வது அவ்வளவு முக்கியமானதா என்ன?''

''சமீபத்தில் 'சமநிலைச் சமுதாயம்’ இதழில், கே.எம்.ஷெரிப் எழுதிய திருப்பூர் பனியன் சகோதரர்களைப் பற்றிய கட்டுரை ஒன்று படித்தேன்.

இன்று ஜவுளித் தலைநகரமாகவும் வருடத்துக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் நகரமாகவும் அறியப்படும் திருப்பூரின் வளர்ச்சியை இரண்டு இஸ்லாமியச் சகோதரர்கள்தான் தொடங்கிவைத்து உள்ளனர்.

சினிமாவின் மீது மோகம்கொண்ட திருப்பூரைச் சேர்ந்த எம்.ஜி.குலாம் காதர் சாகிப் என்பவர், 1929-ம் ஆண்டில் பேசும் பட இயந்திரத்தை வாங்குவதற்காக கல்கத்தாவுக்குச் சென்றார். அங்கு மக்கள் ஓர் இயந்திரத்தைக் கொண்டு துணி தயாரிப்பதைக் கண்டு இருக்கிறார்.

அந்தத் துணியை அவர்கள் 'பனியன்’ என்று அழைத்தார்கள். குலாம் காதர் சாகிப், சினிமா இயந் திரத்தை விட்டுவிட்டு பனியன் இயந்திரத் தோடு ஊர் வந்து சேர்ந்தார்.

தனது சகோதரர் எம்.ஜி.சத்தார் சாகிப்பையும் பங்குதாரராக சேர்த்துக்கொண்டு 'பேபி நிட்டிங் கம்பெனி’ என்ற பெயரில் தென்னிந்தியாவின் முதல் பனியன் நிறுவனத்தைத் தொடங்கினார். பெரிய மாட்டு வண்டிச் சக்கரம் போன்ற அந்த இயந்திரத்தைக் கையால் சுற்றி இரவும் பகலும் உழைத்து சகோதரர்கள் பனியன்களை உற்பத்தி செய்ய... அதை வாங்குவதற்கு மக்கள் யாரும் முன்வரவில்லை. அன்றைய சூழலில் பனியன் அணிவதும் மேலாடை உடுத்துவதும் பெரும் செல்வந்தர் கள் மற்றும் உயர் சாதியினருக்கானதாக இருந்தது. இதனால், அவர்கள் தயாரித்த பனியன்களை வாங்க ஆள் இல்லை.

அப்போது பாமரர்களிடம் பீடி புகைக்கும் பழக்கம் பெருவாரியாகப் பரவி இருந்தது. அத்துடன் தீப்பெட்டி என்பதும் அத்தியாவசியமான பொருளாக இருந்தது. இதைப் பயன்படுத்தி 'பனியன் வாங்கினால், பீடியும் தீப்பெட்டியும் இலவசம்’ என்று அறிவித்தார்கள். அதன் பிறகு, பனியன் வியாபாரம் அமோகமாக வளர்ந்தது. பிறகு, நவீன இயந்தி ரங்களுடன் தங்கள் உற்பத்தியைப் பெருக்கிய துடன் திருப்பூரில் மற்றவர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட உத்வேகம் அளித்து உதவியும் செய்தார்கள்.

1955-ல் 400 தொழிலாளர்களுடன் மிகப் பெரும் நிறுவனமாக வளர்ந்த 'பேபி நிட்டிங் கம்பெனி’ இலங்கைக்கு பனியன்களை அனுப்பி, முதல் ஏற்றுமதியையும் தொடங்கி வைத்தது.

காலப்போக்கில் திருப்பூர், இந்தியாவின் மிகப் பெரிய பனியன் நகரமாக உருவெடுக்க... 'பேபி நிட்டிங் கம்பெனி’ மட்டும் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனது. ஆனால், இந்தச் சகோதரர்கள் பாகிஸ்தானின் கராச்சி நகரில் தொடங்கிய 'திருப்பூர் பனியன்வாலா’ நிறுவனம் இப்போ தும் இயங்குகிறது.

தனது சினிமா ஆசையை யும் பிற்பாடு நிறைவேற்றிக்கொண்டார் குலாம் காதர் சாகிப். நவீன சினிமா இயந்தி ரங்களுடன் நாகப்பட்டினத்திலும் திருவாரூரிலும் 'பேபி டாக்கீஸ்’ என்ற பெயரில் திரை அரங்குகளைக் கட்டினார். அவற்றையும் பின்பு விற்றுவிட்டார். இப்போது சொல்லுங் கள்... வரலாற்றைத் தெரிந்துகொள்வது முக்கியமானதா, இல்லையா?''

- ஆர்.மோகன், தஞ்சாவூர்.

( நானே கேள்வி நானே பதில் - மே 2012 )

நன்றி : https://www.facebook.com/vikatanweb

No comments:

Post a Comment